
கருவில் வசிக்க இடம் கொடுத்து
அன்பின் மழையை என்றும் பொழிந்து
மனதில் என்றும் உயிராய் சுமக்கும்
தாய் என் உறவு!

அவள் அசுகம் காணும் போது
ஆறுதலாய் நான் நிற்க
பணியில் விடுமுறை கிடைக்காமல்
அலைப்பேசி பரிவாய் என் பிரிவு!!

எவ்வளவு நாள் தோளில் சுமந்தாலும்
வலிப்பதாய் இதுவரை சொன்னதில்லை
அவர் துன்பத்தில் என்னின்பத்தை நாடும்
தந்தை என் உறவு;

முதுமையில் அவர் வாடும் போது
தோள் கொடுக்க நானிள்ளாமல்
புறத்திறங்க அவர் எடுக்கும்
கைத்தடியாய் என் பிரிவு!!

இறையிடம் இவரிடம்
எதையும் மறைக்கமுடியவில்லை
எவ்விடத்தும் துணைநிற்கும்
தோழமை என் உறவு!

பண்டிகை நாட்களில்
புத்தாடை உற்சாத்தோடு
நேரமில்லா பணியிடையே
மின்னஞ்சல் வாழ்த்துக்களாய்
தோழமையில் என் பிரிவு;

வாழ்வின் முற்பகுதியில்
மனதை ஆக்ரமித்து
பிற்பகுதியை வழிநடத்தும்
ஆசிரியர்கள் என் உறவு;

கல்வி என்ற பேருந்திலேறி
இலக்கை அடைந்து இறங்கிவிட்டேன்
ஓட்டுனர் நடத்துனர் மட்டும்
நினைவில் இருப்பதுப்போல்
அறிவளிக்கும் குருவிடம் என் பிரிவு!!

பல்லாண்டு வாழ்கவென
பலர் கூடி வாழ்த்திட
என் தனிமையை விரட்டியடித்து
எனை நம்பி கரம் பிடிக்கும்
மனைவி என் உறவு!!

ஆசை அறுபதிலேயே
வானூர்தி ஏறிவிட்டு
மோகத்தில் மூட்டைப்பூச்சியுடன்
குடும்பம் நடத்தும்போது
மனைவி என் பிரிவு!!

சிலமடங்கு பணம் கூடுவதால்
கடவுச்சீட்டின் அடையாளத்துடன்
தெரிந்தே நாடு கடத்தப்படும்போது
அயல்நாடு என் உறவு!

தாகம் தான் தீர்ந்துவிட்டதே
இனி தேவையில்லை தண்ணீரென
தாய்நாடு திரும்புகையில்
அயல்நாட்டுடன் என் பிரிவு!!

ஐயகோ!
சுகமான கருவிலிருந்து
புதியதாய் ஓர் உலகில்
மாட்டிக்கொண்டொமே என அழுகையில்
இரணம் என் உறவு!

வள்ளுவனும் வீழ்ந்தான்
வல்லவனும் வீழ்ந்தான்
இறைவனின் இலக்கணத்தில்
நான் மட்டும் எழுத்துப்பிழையா என்ன?
மரணத்தில் என் பிரிவு!!