என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Thursday, September 24, 2009

பெரியோர் செப்பு மொழிகள் ( பாகம் - 2 )

01. சோதனையின் போதும் சவாலான தருணங்களிலும் ஒருவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை வைத்துத்தான் ஒரு மனிதனை துல்லியமாக மதிப்பிட முடியும் -மார்டின் லூதர் கிங்

02. எதைச் செய்யக்கூடாதோ அதை திறம்படச் செய்வது போல வெட்டிவேலை உலகில் எதுவும் கிடையாது - பீட்டர் டிராக்டர்

03. உங்களது நாட்கள், உங்களது வாழ்க்கையின் சிறிய வடிவங்கள், இன்று நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது. - கார்ல் மார்க்ஸ்

04. அதிகமான வேலை செய்வதென்பது சரியான வேலையைச் செய்வதற்கு இணையாகாது - ஸ்டீபன் ஆர். கோவி.

05. யார் வேண்டுமானாலும் கோபம் அடையலாம், அது மிகச் சுலபம். சரியான நபரிடம், சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான காரணத்துக்காக, சரியான முறையில் கோபப்படுவதற்கு எல்லோராலும் முடியாது. அது சுலபமான காரியமும் அல்ல.
- அரிஸ்டாட்டில்

06. என்னிடமுள்ள சிறந்த அம்சங்களை வெளிக்கொண்டு வருபவனே எனது சிறந்த நண்பன் - கென்றி போட்.
07. மனித குலத்தை ஆட்சி செய்வது அதன் கற்பனைத் திறன்தான்
- நெப்போலியன் பொனபாட்.
08. நமது முக்கியமான பிரச்சனையை தீர்க்கும்போது ஓர் உண்மையை நினைவில் கொள்ள வேண்டும். அந்தப் பிரச்சனையை உருவாக்கிய அதே பழைய சிந்தனை மட்டத்தால் அந்தப் பிரச்சனையை தீர்க்க முடியாது. - அல்பார்ட் ஐன்ஸ்டைன்.
09. இதுவரை நான் படித்திராத விடயங்களை உள்ளடக்கிய நல்ல புத்தகத்தை என்னிடம் தருபவனே எனது சிறந்த நண்பன் - அபிரகாம் லிங்கன்.
10. நம்பிக்கைதான் யதார்த்தத்தைப் படைக்கிறது. - வில்லியம் ஜேம்ஸ்


11. பயிற்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் வெறுத்தேன். ஆனால் விட்டு ஓடாதே, இப்பொழுது சிரமப்படு, பின் வாழ்நாள் முழுவதும் சாம்பியனாக வாழலாம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் உலக சாம்பியன் ஆனேன் - குத்துச்சண்டை வீரர் முகமது அலி.
12. தொடர்ச்சியான ஈடுபாடு, கடின உழைப்பு, விடாமுயற்சி, இந்த மூன்றும்தான் சாதனையாளரை மற்றவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. - தாமஸ் கார்லைஸ்.
13. வாழ்க்கையில் தோல்வி கண்டவர்களில் ஏராளமானவர்கள் வெற்றியை நெருங்கிவிட்டதை அறியாமல் தமது முயற்சிகளைக் கைவிட்டவர்களே. - தாமஸ் எடிசன்.
14. சிலர் நம்மை சுற்றியிருப்பவர்கள் தட்டிக் கொடுத்து ஊக்குவித்தால் மட்டும் வெற்றி பெறுகிறார்கள். இன்னும் சிலர் நரகமே வந்து தடுத்தாலும் கூட உடைத்தெறிந்து வெற்றி பெறுகிறார்கள். இந்த இரண்டு பிரிவுகளில் நீங்கள் எதில் இடம் பெறப் போகிறீர்கள் ? - நெப்போலியன் கில்.
15. நமது சிந்தனைகளை நமது உணர்ச்சி பூர்வமான கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இந்த உண்மையைப் புரிந்து ஏற்றுக் கொள்வதுதான் மனித நாகரிகத்தின் உயர்ந்த கட்டம். - சார்லஸ் டார்வின்.

16. வெற்றி பெற விடா முயற்சிதான் மிகமிக அவசியமானது. விடா முயற்சி எதையும் வென்றுவிடுகிறது. இயற்கையைக் கூட வென்றுவிடுகிறது - ஜே.டி.ரொக்பெல்லர்
17. திரும்ப திரும்ப எதைச் செய்கிறோமோ அதுதான் நாம். உன்னதம் என்பது ஒரு செயல் அல்ல, அது ஒரு பழக்கம் - அரிஸ்டாட்டில்
18. பெரிய சாதனைகள் பலத்தால் அல்ல, தொடர்ந்து முயற்சிப்பதனாலேயே நிகழுகின்றன. - சாமுவேல் ஜான்சன்.
19. வாழ்க்கையின் துயரம் இலக்கை அடையாமல் சிரமப்படுவது அல்ல, இலக்கே இல்லாமல் இருப்பதுதான் - பென்சமின்
20. உங்களது உயர்வான இலக்குகளை சிறுமைப்படுத்துவோரிடமிருந்து விலகியே நில்லுங்கள் - மார்க் ட்வைன்.
21. உங்கள் எண்ணங்களை மாற்றுங்கள் உங்கள் உலகமே மாறிவிடும். - தாமஸ் வின்ஸ்டன் பீலே
22. எனது வலிமை எனது விடாப்பிடியான பண்பில்தான் தங்கியுள்ளது - லூயி பாஸ்டர்.
23. சுவர்க்கத்தை நரகமாகவும், நரகத்தை சுவர்க்கமாகவும் மாற்ற மனதால் முடியும் - மில்டன்
24. எப்போதுமே வாய்ப்புக்கள் மீதும் சவால்கள் மீதும் உங்கள் கவனத்தை குவியுங்கள். பிரச்சனைகள் தோல்விகள் என்று நீங்கள் கருதுபவற்றின் மீது கவனம் செலுத்திக் கொண்டிருக்காதீர்கள் - வால்டர் டோயல் ஸ்டேபிள்
25. உற்சாகத்தை இழந்து விடாமலே ஒரு தோல்வியில் இருந்து மற்றொரு தோல்விக்கு செல்வதுதான் வெற்றி - வின்ஸ்டன் சேர்ச்சில்.

பணமும்..! குணமும்...!!

மனிதனிடமிருந்து
பணத்தைப் பிரிப்பது குணம்
குணத்தைப் பிரிப்பது பணம்;

உலகில்
மதங்கள் ஆயிரம்
ஜாதிகள் கோடியென உலவினும்
சமுதாயத்தில் மனிதன்
ஏழை பணமுடையான் எனும்
இருவகையில் தான்
பார்க்கப்படுகிறான்
பிரிக்கப்படுகிறான்;

தன் இருப்பிடத்தில்
மகிழ்வையும் மதிப்பையும் கொடுப்பதன்றி
வேற்றொரு குணமில்லை பணத்திற்கு
அதைக் கொண்ட மனிதன் தான்
தீ வைத்துத்கொள்கிறான்
தன் குணத்திற்கு;

இரத்தச் சொந்தங்கள்
பால்ய நண்பர்கள்
யாவரும் விலகிடுவர்
பணம் கொண்ட நேரத்தில்
ஆணவம் கொண்ட மனிதனை விட்டு ;

பணம்
சில மனிதரின் மனதை
கொடை உள்ளமாய் மாற்றுகிறது
பல மனிதரின் மனதில்
கோடையாய் அவர் குணத்தை
வற்றவைக்கிறது;

பொதுநலவாதி கூட
சுயநலவியாதி பிடித்து அலைவார்
பணத்தை அவர் துணையாக்கும்போது

பணம் மாற்றுகிறதா குணத்தை?
இல்லை
குணம் மாறுகிறதா பணத்தால்?
இவ்விடை தெரியா வினவுகள்
உலகில் உலவுகின்றன
இன்றும் கொடை மன மனிதர்கள்
சில‌ர் வாழ்ந்து கொண்டிருப்பதால்!

உலகில் யாரும் தினம்
பார்க்க போவதில்லை பணம்
மனிதருக்கு மிக முக்கியம்
நல்ல குணத்தோடு ஓர் மனம்!

- க‌வித்தோழன் -

Saturday, September 19, 2009

பெரியோர்களின் செப்பு மொழிகள்...!!!

ஜாதீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி இருக்கின்றனர். நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி இருக்கின்றனர்.
- அரிஸ்டாட்டில்.


மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.
- மாத்யூஸ்.


நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக
விரும்பாதே.
-நியேட்சே.


வாழ்க்கையில் நாம் முன்னேற முன்னேறத்தான் நம் திறமைகளின் வரம்புகளைத் தெரிந்து கொள்கிறோம்.
- பிராய்டு.


அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.
- புத்தர்.

கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கிவிடும்.
- முகம்மது நபி.


சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்.
- ஸ்டீலி.

மெதுவாகப் பேசு. அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும் நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்.
- வள்ளலார்.


இப்பொழுதே மகிழ்ச்சியாய் இருக்கக் கற்றுக் கொள்ளூங்கள். இன்னும் துன்பங்கள் வரக் காத்திருக்கின்றன.
- பிரேண்டர்ஜான்சன்.


ஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சிதான் உலகில் பல பெருந்துயருக்கும் காரணமாயிருக்கிறது.
- சாமுவேல் பட்லர்.

வாழ்க்கையை ஏமாற்ற முடியாது. வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு புத்தகத்தின் இறுதிப் பக்கத்தில் விடை கிடையாது.
- கீர்கே கார்ட்.


நோய் வருவரை உண்பவன், உடல் நலமாகும் வரை உண்ணா நோன்பு மேற்கொள்ள வேண்டிவரும்.
- தாமஸ் புல்லர்.

தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்கிற எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.
- டிரெட்ஸி.


இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை.
- மகாகவி பாரதியார்.


அரைகுறையாக எதையும் செய்யாதீர். நல்லவை என்றால் துணிந்து நிறைவேற்றுங்கள். கெட்டது என்றால் அதைச் செய்யாமல் அறவே தவிர்த்து விடுங்கள்.
- கில்ப்பின்.


நம் காலுக்கடியிலேயே நாம் தேடும் சந்தோசம், அமைதி இருக்கிறது. ஆனால் அஞ்ஞானம் என்னும் இருட்டில் இருக்கும் நமக்கு அது தெரிவதில்லை.
-சுவாமி மித்ரானந்தா.

எல்லா மனிதர்களையும் நம்பிவிடுவது ஆபத்து. ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து.
- ஆபிரஹாம் லிங்கன்.

கஷ்டங்கள், நஷ்டங்கள் அடைந்த பின் மனிதர் அதிக அடக்கத்தையும் அறிவையும் பெறுகின்றனர்.
-பிராங்க்ளின்

ஒரு மனிதன் மிருகத்தைக் கொன்றால் அது வீரம். மிருகம் ஒரு மனிதனைக் கொன்றால் அது பயங்கரம்.
- பெர்னாட்ஷா.


அறிவுத் தேவையை விட கவனக்குறைவுதான் அதிக கஷ்டத்தை உண்டாக்கி
விடுகிறது.
- சர்ச்சில்.

தாராள மனம் படைத்த முதலாளி அவரது தொழிலாளி எவரையும் எந்நாளும் கைவிட மாட்டார்.
- ஜி.டி.நாயுடு.


நமது அறிவு என்பது எறும்பு என்றால் வாழ்க்கையும் இந்த உலகமும் யானையைப் போன்றது.
- சுவாமி சுகபோதானந்தா.


பரிந்துரை ஒருவரை அறிமுகம் மட்டுமே செய்யும். தகுதிதான் அவரை நிலைபெறச் செய்யும்.
-வைரமுத்து.


தோல்வி இல்லாமல் கிடைக்கப்பெறும் எவ்வித வெற்றியிலும் நிறைவு கிடையாது.
- அடியேன் முயற்சித்தது.

நட்புடன்......கவித்தோழன்

Thursday, July 30, 2009

உறவும் பிரிவும்!!!



கருவில் வசிக்க இடம் கொடுத்து
அன்பின் மழையை என்றும் பொழிந்து
மனதில் என்றும் உயிராய் சுமக்கும்
தாய் என் உறவு!




அவள் அசுகம் காணும் போது
ஆறுதலாய் நான் நிற்க
பணியில் விடுமுறை கிடைக்காமல்
அலைப்பேசி பரிவாய் என் பிரிவு!!



எவ்வளவு நாள் தோளில் சுமந்தாலும்
வலிப்பதாய் இதுவரை சொன்னதில்லை
அவர் துன்பத்தில் என்னின்பத்தை நாடும்
தந்தை என் உறவு;



முதுமையில் அவர் வாடும் போது
தோள் கொடுக்க நானிள்ளாமல்
புறத்திறங்க அவர் எடுக்கும்
கைத்தடியாய் என் பிரிவு!!




இறையிடம் இவரிடம்
எதையும் மறைக்கமுடியவில்லை
எவ்விடத்தும் துணைநிற்கும்
தோழமை என் உறவு!



பண்டிகை நாட்களில்
புத்தாடை உற்சாத்தோடு
நேரமில்லா பணியிடையே
மின்னஞ்சல் வாழ்த்துக்களாய்
தோழமையில் என் பிரிவு;



வாழ்வின் முற்பகுதியில்
மனதை ஆக்ரமித்து
பிற்பகுதியை வழிநடத்தும்
ஆசிரியர்கள் என் உறவு;




கல்வி என்ற பேருந்திலேறி
இலக்கை அடைந்து இறங்கிவிட்டேன்
ஓட்டுனர் நடத்துனர் மட்டும்
நினைவில் இருப்பதுப்போல்
அறிவளிக்கும் குருவிடம் என் பிரிவு!!



பல்லாண்டு வாழ்கவென
பலர் கூடி வாழ்த்திட
என் தனிமையை விரட்டியடித்து
எனை நம்பி கரம் பிடிக்கும்
மனைவி என் உறவு!!




ஆசை அறுபதிலேயே
வானூர்தி ஏறிவிட்டு
மோகத்தில் மூட்டைப்பூச்சியுடன்
குடும்பம் நடத்தும்போது
மனைவி என் பிரிவு!!




சிலமடங்கு பணம் கூடுவதால்
கடவுச்சீட்டின் அடையாளத்துடன்
தெரிந்தே நாடு கடத்தப்படும்போது
அயல்நாடு என் உறவு!




தாகம் தான் தீர்ந்துவிட்டதே
இனி தேவையில்லை தண்ணீரென
தாய்நாடு திரும்புகையில்
அயல்நாட்டுடன் என் பிரிவு!!



ஐயகோ!
சுகமான கருவிலிருந்து
புதியதாய் ஓர் உலகில்
மாட்டிக்கொண்டொமே என அழுகையில்
இரணம் என் உறவு!



வள்ளுவனும் வீழ்ந்தான்
வல்லவனும் வீழ்ந்தான்
இறைவனின் இலக்கணத்தில்
நான் மட்டும் எழுத்துப்பிழையா என்ன?
மரணத்தில் என் பிரிவு!!


Friday, July 10, 2009

என் கையில்!



சத்யமாக நாளை உலகம்
என் கையில்!

இவற்றை என் கையில்
திணித்தவருக்கு என்னுடைய பதிலை
சொல்ல வெகு நாட்களில்லை!

இவ்வுலகை படித்துக் கொள்ள
அவர் கொடுத்த வாய்ப்புக்கு
கோடி நன்றிகள்!

இதோ!
என் கையிலுள்ள ஆயுதத்தால்
நொருங்கிப் போகும் கல்லைப் போன்று
நாளை உலகை வெல்வேன் என்னறிவால்!

இன்று
நான் இவ்விடம் அடைந்ததைப்போன்று
நாளை வேறு சிறார்
வராமல் தடுப்பேன் என் துணிவினால்!

விரைவில் ஒரு நாள்
சமுதாயம் என்பது நாம் தான்
வேற்றொருவரை கை காண்பித்து
தப்பித்தலாகாது என்பதை
நவீன அநாகரிக உலகிற்கு உணற்றுவேன்!

சத்யமாக உலகம்
நாளை என் கையில்!!!

Wednesday, June 24, 2009

பருவம் !!!


மற்றவர் செய்வதை திருப்பிச் செய்து
சுற்றமும் மகிழ்ந்திட
நானும் மகிழ்ந்திட்டேன்
மனதிலும் செயலிலும்
இறைவனை காட்டிடும்
குழந்தையாய்;


எதிர்கால எழுச்சிக்காக
நிகழ்கால வீழ்ச்சிகளை
மனதிலே தாங்கினேன்
துணிவுடனே இளைஞனாய்;




உழைப்பாலே தேடினேன்
விடியல் பல கோடியை
விடிந்து விட்டும் தேடினேன்
சராசரி மனிதனாய்;


- ஷேக் இப்ராஹிம்

Tuesday, June 16, 2009

குறுங்கவிதைகள்!!


என் உடலில்
எனக்குத் தெரியாமல்
இருவர்
ஒன்று என்னுயிர்
மற்றொன்று அதற்குள்
நீ!




அலைபேசி அழைப்பாய்
மின்னஞ்சல் அரட்டையாய்
தினம் என்னை
சந்திக்கும் நீ
எப்போது காட்டப் போகிறாய்
உன் 'முக'வரி!



உன்னை மாற்றிவிட நானும்
என்னை மாற்றிவிட நீயும்
செய்யும் செயல்களிலாவது
ஒற்றுமையாய் மகிழ்வுறட்டும்
நம் நினைவுகள்!!


Saturday, June 13, 2009

கவித்தோழனின் குறுங்கவிதைகள்!!




மறந்துவிட்ட பக்கங்களை
மறுமுறை தேடுகிறேன்
நாளை எனக்கு
தேர்வு நாளாம்!!



நான் தினம்
நிறம் மாறினாலும்
இவன் நிறம் மாறவில்லை
சலிப்புடன்,
உடை!!



செய்வது தெரியாது
சொல்வது புரியாது
தூக்கமுமில்லை
மரணிக்கவுமில்லை
போதையுடன்

மயக்கம்!!



அனுதினமும் யாருக்கும்
தெரியாமல் நடக்கும்
ஓர் தேடல்
விடியல் இரவையும்
இரவு விடியலையும் !!



எதையும் தடுத்து
நிறுத்த முடியவில்லை
சொற்றொடரை நிறுத்தியது
முற்றுப்புள்ளி!!

Thursday, June 11, 2009

குறுங்கவிதைகள்!!


மறந்து
மறைந்து
மறையாதது
ஆசை!




முகம் முழுவதாய்
நனைத்தப் போதிலும்
தலை நனைக்காத மழை
கண்ணீர்!



பிரிந்து செல்லும்
திசை அறியாததால்
கூடி நின்று அழுதன
மழையாய் மேகங்கள்!




இறுதியில் போய்
முடியும் இடம்
தெரியாமல் இருக்கின்றன
எல்லோர்க்கும் வழிகாட்டும்
பாதைகள்!







அனைவரும்
கூச்சல் போடும் நேரத்திலும்
அமைதியாய் இருந்தது
மின்சார வெட்டில் மாட்டிக்கொண்ட
ஒலிப்பெருக்கி!


Thursday, May 21, 2009

காதலில் ஓர் பக்குவம்!!!

சூரியனும் நிலவும் ஒரு நாளில்
ஒரு நிமிடம் மட்டும்
நேரெதிர் பக்கமாய் சந்திப்பதற்கு
காத்திருப்பது போல
காதலில் பொறுமை அவசியம்;

செடியில் பூப்பதை எல்லாம்
தான் விரும்பினாலும்
பூக்களை ரசித்து விரும்புபவர்க்கு
செடி விட்டு கொடுப்பது போல
காதலில் விட்டு கொடுத்தல் அவசியம்;

இறுதியில்

காதல் என்பது
காமம் திறக்கும் சாவியாகாமல்
மனம் திறக்கும்
புத்தகமாக இருக்க வேண்டும்
அதை படித்து இன்பம் பெறுவதை விட
நம் பக்குவம் அதிகமாகும்;

"நம் காதல்"

ஆயிரம் நாட்களாய்
அமைதியாய் காத்திருந்தேன்
ஒரு வார்த்தை கிடைத்துவிட
நீ வந்து சேர்ந்துவிட்டாய்
கவிதையாய் மாறிவிட்டேன்
என் உயிர் தோழியே!

சுதந்திர பறவைகளாய் நாம்
ஒளி தரும் கதிராய் நீ
உன்னோடு நிழலாய் நான்
இயற்கையோடு ஒன்றிவிட்டோம்
நம் காதல் உயர் காதலடி!

காதல் புனிதமானது!!!

நிலவினைப் பார்
தன்னிலை தனிமையானதால்
பாசத்திற்கு ஏங்கி தேய்கிறது;
சூரியனைப் பார்
தன்னிலை எல்லார்க்கும் தெரியும்படி
பூமியைச் சுட்டெரிக்கிறது;
மேகத்தைப் பார்
தன்னுடைய உறவு
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாய்
இருப்பதை பார்த்து
தன் ரத்தத்தை மழையாய் பொழிகிறது;
உன்னைத் தொட்டு விட பொறுமை உண்டு
உன்னை மறந்து விட பொறுமை இல்லையென்று
கடல் சொல்லும் கரையை பார்த்து;

இது இயற்கை கற்றுத்தரும்
காதல் இலக்கணம்
காதல் அழகு பார்த்து வரின்
அது அழகில்லை
அகத்தை பார்த்து வரின்
அதற்கு அழிவில்லையென்பது
காதலின் நியதி;
கவிதையாய் இல்லாமல்
ஒரு கனம் உங்களோடு
பேசுவதாய் வைத்து கொள்ளுங்கள்;
ஒரு நிமிடம்
உங்கள் நெஞ்சின் துடிப்பை
கை வைத்து கேட்டு பாருங்கள்;
அந்த சத்தம் உங்களுக்கு
சொல்லி காட்டுகிறதா?
உங்கள் இதயத் துடிப்பை
இயக்குவது யார் என்று;
அவரை உங்கள் நினைவினில் வைக்காமல்
நெஞ்சினில் வைத்ததால் தான்
அவர் உங்கள் உயிருடன்
துடித்து கொண்டிருக்கிறார்;
எக்கனமும் மறந்து விடாதிர்கள்
அவரை நினைக்க
இல்லையெல்
நீஙகள் மறக்கும் அக்கனமே
மாறிவிட போகிறது
அவர் இவ்வுலகை துறக்க;
காதல் மனதை சந்தோஷமாக
வைப்பது இல்லை ;
அதை தூயப் படுத்துகிறது
அதனால் தான்
காதல் புனிதமானது;

சாரல்!!



கதிர் தன்னொளி குறைத்திருக்க
வானவில் வருகைக்காக
மேகத்தை வானம் கரும்புடவையாய் உடுத்திருக்க;
ஜில்லென்று மெல்ல வீசிய காற்றில்
மண் வாசனையுடன்
என் மனதை நனைத்தது
மழையிலிருந்து
சில துளி சாரல்!


Saturday, May 9, 2009

விடைக் கொடு???

சில நாட்கள் கழித்து
உன்னிடம் நான் பேசிய நிமிடங்களில்
நீ பேசிய வார்த்தைகள்
என் மனதில்
வறண்ட நிலத்தில் மழையாய்,
இருண்ட வானில் நிலவாய்,
பசித்த எனக்கு உணவாய்,
வலித்த மனதிற்கு மருந்தாய்,
தேடி வந்த அதிர்ஷ்டமாய்
இருக்கக் காரணம் என்ன?
நீயும் நானும் கடந்த நாட்களில்
நம் நினைவோடு வாழ்ந்து வந்தோம்
இனி நிஜத்தொடு வாழ
பதிலை உன்னிடம் வைத்துக்கொண்டு
கேள்வி என்னிடம் கேட்பது ஏன்?
என்னுயிரே!
உன் மனதிலிருந்து பதிலைச்சொல்
நான் இன்னுமா உன் மனதில்
நுழையாமல் இருக்கிறேன்?
உன்னுடையப் பதிலை
நீ சொல்ல எடுக்கும் கணங்கள்
என் மனதில் ரணங்கள் உருவாகின்றன;
எதிர்பார்க்கிறேன் உன்னுடைய முடிவை
தேர்வெழுதிய மாணவனைப் போல்
விடைக் கொடு?
இல்லை
என் மனதிற்கு விடுதலைக் கொடு!

" நீதான்!! "

உன் மருதாணி ஓவியத்தின் கோடுகளை
ஒருமுறை உற்றுப்பார்
அவ்விடத்தில் நான் எழுதி
மறைத்து வைத்த கவிதைகள்
இருக்கக்கூடும்;
அதை அழித்து விடாதே
உன்னை நினைக்கும்
என் மனம் வலிக்கக்கூடும்;
மருதாணி ஒவியத்தின் பின்னாலே
அழகு நிலவை மறைத்து வைத்த ஒவியன்
கண்டிப்பாக அந்த பிரம்மன் தான்;
அப்படி மறைக்க காரணம்
அது உலகிலுள்ள
அனைத்து அழகாலும் செய்ததால் தான்;
அந்த அழகு வேரு யாருமில்லை
நீதான்!

உலகின் அடிமைத்தளமே!!

உலகின் அடிமைத்தளமே!!

அடித்தளமே!

உலகின் அடிமைத்தளமே!

படைத்தவன் வணங்கிடும் பொருளே!!

சிலருக்கு பாரமாய் பலருக்கு தூரமாய்

நிலையற்ற ஓரு உலகே!

உன்னுடைய அணைப்பினால் மகிழ்வை நீ கொடுத்திடுவாய்

உணர்வற்ற ஓர் துணையே!

தன் மதிப்பினால் பிறர் மதிப்பை ஏற்றி இறக்கி

உலகை ஆளும் இருமுகனே!!

இரண்டாக கிழிந்தாலும் குப்பையில் கிடந்தாலும்

அழகாய் தெரியும் காகிதத் தாளே!!

முதலும் இல்லை முடிவும் இல்லை

உன்னைப்பற்றி எழுதிவிட!!

உறங்கிடு என் தோழியே!!

இறைவன்
நிலவினில் அழகினை கொடுத்தன் காரணம்
தன் துணை அதைவிட அழகென்று
தெரியத்தான்;

நட்சத்திரத்தில் ஒளியினை கொடுத்ததன் காரணம்
செயற்கைத்துணைக் கொண்டவரை இயற்கையின்
வெளிச்சம் காட்டத் தான்;

உலகாசை அதிகம் கொண்ட மனிதர்க்கு
பாடம் புகட்டத்தான்
மேகம் நிலவினை மறைக்கிறது
அதன் காரணம்
எதுவும் நிலையல்லவே!

கனவினில் நிஜங்களை உணர்வதனால்
நிஜங்களை கனவாக மாற்ற முடியாது
காரணம்
இது நிழல்படமில்லாத நிஜப்படம்;

உறங்கும் நேரம் மரணத்தை உணர்ந்துகொள்
அதன் பயம் உன்னிடமிருந்து குறையும்;

இரவுகள் கற்றுக்கொடுக்கும் ஓரே பாடம்
உலகத்தில் மாற்றங்கள் அனைத்தும் பொதுவானது;

ஒய்வெடுக்கும் நேரத்தில் இந்த கவித்தோழன் தாலாட்ட
உறங்கிடு என் தோழியே!

- ஷேக் இப்ராஹிம்

எதைத் தேடுகிறோம்???

பிறக்கும் நேரத்தில்
மெதுவாக விழித்திறந்து
பார்க்கும் போது
அழகான உலகைத் தேடுகிறோம்;

அன்பும் அரவணைப்பும்
அதிகமாய் கொடுக்கும் தாயையும்
நிற்கும்வரை விழாமலிருந்துவிட
தவறாமல் தோள் கொடுக்கும்
தந்தையையும் தேடுகிறோம்;

சிறந்த வழியைக் காட்டிவிட
ஒரு ஆசிரியரையும்
வாழக்கைப் பாதையில்
சரியாக பயணிக்க
நல்ல கல்வியையும் தேடுகிறோம்;

இன்பதுன்பத்தில் பங்கிடவும்
நடக்கும் தூரம் வரை காலாக இருக்கவும்
நம் மனமறிந்த நல்ல உள்ளத்திடம்
உயரிய தோழமையைத் தேடுகிறோம்;

மீசை முளைத்த உடனேயே
அழகான பெண்ணின் பார்வை பட்டு விடவும்
அவளைக் கவர்வதற்காண
திறமையையும் தேடுகிறோம்;

உலகை விரிவாய் தெரிந்துகொள்ள
நல்ல கல்லூரியையும்
அதன்பின்
சிறகு முளைத்தப் பறவையாய்
தனியாய் பறந்துவிட
நல்ல வேலையையும் தேடுகிறோம்;

ஒன்றிரண்டு காதல் முறிந்ததாலும்
தனிமை அதிகம் வெறுத்ததாலும்
நம்மோடு கைக்கோர்த்து பயணிக்க
அழகைவிட அழகான
பெண்ணைத் தேடுகிறோம்;

அறிவு நிறைந்த ஆண் பிள்ளையும்
பண்பு நிறைந்த பெண் பிள்ளையும்
நம் பெருமையைக் காத்திட
அவர்களுக்கு
நல்ல எதிர்காலத்தைத் தேடுகிறோம்;

அன்பும் அமைதியும் ஆறுதலும்
மனம் நிறைவாகும் வரை கிடைத்திட
நல்ல முதுமையையும் தேடுகிறோம்;

நாம் மரணிக்கும் நேரத்தில்
நம்பெயர் நிலைத்து நிற்க
நம் வாழ்விற்கு
நல்லதொரு அர்த்தத்தைத் தேடுகிறோம்;

Saturday, April 25, 2009

நட்பு!!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய்
வானத்தை தீண்டும் மேகமில்லை நட்பு
என்றும் ஓரிடம் இருக்கும் நட்சத்திரம்
நட்பு;

என் உடலில் ஒரு உலகம் உண்டு
ஆனால் அதை இன்றுவரை நான்
பார்த்தது இல்லை;
அது ஒரு கனம் துடிக்க மறந்து விட்டால்
நான் ஒரு பிணம்
அதுபோல
நட்பு மனதிலிருக்கும் இடம்
யாருக்கும் தெரியாது;

தினம் நான் செல்லும் வழியில்
ஒரு ரோஜா புதிதாய்
பூத்திருப்பதை கண்டேன்;

அதனழகு என்னை கவர்ந்திழுத்தது
பிறகு பறித்து விடலாமென்று கடந்துவிட்டேன்
அரை மணி கழித்து பார்த்தால்
செடியில் அது இல்லை;

ஏமாற்ற மிகுதியில் சோகத்துடன்
பள்ளிக்கூடம் சென்று பார்த்தேன்
என் நண்பன் கையில் அந்த ரோஜா
எனக்காக!

அலைகளும் என்றாவது ஒரு நாள்
தன் எல்லையைத் தாண்டி விடும்
நட்பு என்றுமே
அதன் தன்மை மாற்றாது;

உலக இலக்கணத்தில் நட்பை பிரிக்க
முடியாத காரணம்
அது கடவுள் படைத்த உறவல்ல
மனிதன் உருவாக்கிய உறவு;

நட்போடு பழகுங்கள்!
நட்பால் உலக ஒற்றுமை ஓங்கட்டும்!!
-கவித்தோழன்



ஒரு கோடி வணக்கம் தமிழே!!


வரலாறு சில கோடி
புராணங்கள் பல கோடியென
தாய் உன்னை காத்து வந்தோம்
உன் துணையால் வாழ்ந்து வந்தோம்;


அன்னிய மொழியின் ஆதிக்கத்தில்
அன்னையே உன்னை பலர்
மறந்து விட்டோமென
நினைத்து விட வேண்டாம்;

வாடிய பயிரை கண்டே
வாடிய தமிழருக்கு
பிற உயிர் கெடுக்கும்
மனம் இருக்காது;

தமிழை அழிக்க
யாவராலும் முடியாது
உலகில் எங்காவது ஒருவனதன்
அகரம் அறியும் வரை;

ஆம்!
தமிழுக்கும் தமிழனுக்கும்
இது வீழ்ச்சி பருவம் தான்;
பல வீழ்ச்சி பருவங்கள் தான்
ஒரு எழுச்சி பருவத்தை
நமக்கு அறிமுகப்படுத்தும்;

தோழர்களே!!

நம் எண்ணத்துடனும் எழுத்துடனும்
தமிழ்த்தாய்க்கு துணை நின்றால்
அவளுக்கு என்றுமே
வெற்றி பருவமே!!

-கவித்தோழன்