என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Thursday, May 21, 2009

காதலில் ஓர் பக்குவம்!!!

சூரியனும் நிலவும் ஒரு நாளில்
ஒரு நிமிடம் மட்டும்
நேரெதிர் பக்கமாய் சந்திப்பதற்கு
காத்திருப்பது போல
காதலில் பொறுமை அவசியம்;

செடியில் பூப்பதை எல்லாம்
தான் விரும்பினாலும்
பூக்களை ரசித்து விரும்புபவர்க்கு
செடி விட்டு கொடுப்பது போல
காதலில் விட்டு கொடுத்தல் அவசியம்;

இறுதியில்

காதல் என்பது
காமம் திறக்கும் சாவியாகாமல்
மனம் திறக்கும்
புத்தகமாக இருக்க வேண்டும்
அதை படித்து இன்பம் பெறுவதை விட
நம் பக்குவம் அதிகமாகும்;

"நம் காதல்"

ஆயிரம் நாட்களாய்
அமைதியாய் காத்திருந்தேன்
ஒரு வார்த்தை கிடைத்துவிட
நீ வந்து சேர்ந்துவிட்டாய்
கவிதையாய் மாறிவிட்டேன்
என் உயிர் தோழியே!

சுதந்திர பறவைகளாய் நாம்
ஒளி தரும் கதிராய் நீ
உன்னோடு நிழலாய் நான்
இயற்கையோடு ஒன்றிவிட்டோம்
நம் காதல் உயர் காதலடி!

காதல் புனிதமானது!!!

நிலவினைப் பார்
தன்னிலை தனிமையானதால்
பாசத்திற்கு ஏங்கி தேய்கிறது;
சூரியனைப் பார்
தன்னிலை எல்லார்க்கும் தெரியும்படி
பூமியைச் சுட்டெரிக்கிறது;
மேகத்தைப் பார்
தன்னுடைய உறவு
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாய்
இருப்பதை பார்த்து
தன் ரத்தத்தை மழையாய் பொழிகிறது;
உன்னைத் தொட்டு விட பொறுமை உண்டு
உன்னை மறந்து விட பொறுமை இல்லையென்று
கடல் சொல்லும் கரையை பார்த்து;

இது இயற்கை கற்றுத்தரும்
காதல் இலக்கணம்
காதல் அழகு பார்த்து வரின்
அது அழகில்லை
அகத்தை பார்த்து வரின்
அதற்கு அழிவில்லையென்பது
காதலின் நியதி;
கவிதையாய் இல்லாமல்
ஒரு கனம் உங்களோடு
பேசுவதாய் வைத்து கொள்ளுங்கள்;
ஒரு நிமிடம்
உங்கள் நெஞ்சின் துடிப்பை
கை வைத்து கேட்டு பாருங்கள்;
அந்த சத்தம் உங்களுக்கு
சொல்லி காட்டுகிறதா?
உங்கள் இதயத் துடிப்பை
இயக்குவது யார் என்று;
அவரை உங்கள் நினைவினில் வைக்காமல்
நெஞ்சினில் வைத்ததால் தான்
அவர் உங்கள் உயிருடன்
துடித்து கொண்டிருக்கிறார்;
எக்கனமும் மறந்து விடாதிர்கள்
அவரை நினைக்க
இல்லையெல்
நீஙகள் மறக்கும் அக்கனமே
மாறிவிட போகிறது
அவர் இவ்வுலகை துறக்க;
காதல் மனதை சந்தோஷமாக
வைப்பது இல்லை ;
அதை தூயப் படுத்துகிறது
அதனால் தான்
காதல் புனிதமானது;

சாரல்!!



கதிர் தன்னொளி குறைத்திருக்க
வானவில் வருகைக்காக
மேகத்தை வானம் கரும்புடவையாய் உடுத்திருக்க;
ஜில்லென்று மெல்ல வீசிய காற்றில்
மண் வாசனையுடன்
என் மனதை நனைத்தது
மழையிலிருந்து
சில துளி சாரல்!


Saturday, May 9, 2009

விடைக் கொடு???

சில நாட்கள் கழித்து
உன்னிடம் நான் பேசிய நிமிடங்களில்
நீ பேசிய வார்த்தைகள்
என் மனதில்
வறண்ட நிலத்தில் மழையாய்,
இருண்ட வானில் நிலவாய்,
பசித்த எனக்கு உணவாய்,
வலித்த மனதிற்கு மருந்தாய்,
தேடி வந்த அதிர்ஷ்டமாய்
இருக்கக் காரணம் என்ன?
நீயும் நானும் கடந்த நாட்களில்
நம் நினைவோடு வாழ்ந்து வந்தோம்
இனி நிஜத்தொடு வாழ
பதிலை உன்னிடம் வைத்துக்கொண்டு
கேள்வி என்னிடம் கேட்பது ஏன்?
என்னுயிரே!
உன் மனதிலிருந்து பதிலைச்சொல்
நான் இன்னுமா உன் மனதில்
நுழையாமல் இருக்கிறேன்?
உன்னுடையப் பதிலை
நீ சொல்ல எடுக்கும் கணங்கள்
என் மனதில் ரணங்கள் உருவாகின்றன;
எதிர்பார்க்கிறேன் உன்னுடைய முடிவை
தேர்வெழுதிய மாணவனைப் போல்
விடைக் கொடு?
இல்லை
என் மனதிற்கு விடுதலைக் கொடு!

" நீதான்!! "

உன் மருதாணி ஓவியத்தின் கோடுகளை
ஒருமுறை உற்றுப்பார்
அவ்விடத்தில் நான் எழுதி
மறைத்து வைத்த கவிதைகள்
இருக்கக்கூடும்;
அதை அழித்து விடாதே
உன்னை நினைக்கும்
என் மனம் வலிக்கக்கூடும்;
மருதாணி ஒவியத்தின் பின்னாலே
அழகு நிலவை மறைத்து வைத்த ஒவியன்
கண்டிப்பாக அந்த பிரம்மன் தான்;
அப்படி மறைக்க காரணம்
அது உலகிலுள்ள
அனைத்து அழகாலும் செய்ததால் தான்;
அந்த அழகு வேரு யாருமில்லை
நீதான்!

உலகின் அடிமைத்தளமே!!

உலகின் அடிமைத்தளமே!!

அடித்தளமே!

உலகின் அடிமைத்தளமே!

படைத்தவன் வணங்கிடும் பொருளே!!

சிலருக்கு பாரமாய் பலருக்கு தூரமாய்

நிலையற்ற ஓரு உலகே!

உன்னுடைய அணைப்பினால் மகிழ்வை நீ கொடுத்திடுவாய்

உணர்வற்ற ஓர் துணையே!

தன் மதிப்பினால் பிறர் மதிப்பை ஏற்றி இறக்கி

உலகை ஆளும் இருமுகனே!!

இரண்டாக கிழிந்தாலும் குப்பையில் கிடந்தாலும்

அழகாய் தெரியும் காகிதத் தாளே!!

முதலும் இல்லை முடிவும் இல்லை

உன்னைப்பற்றி எழுதிவிட!!

உறங்கிடு என் தோழியே!!

இறைவன்
நிலவினில் அழகினை கொடுத்தன் காரணம்
தன் துணை அதைவிட அழகென்று
தெரியத்தான்;

நட்சத்திரத்தில் ஒளியினை கொடுத்ததன் காரணம்
செயற்கைத்துணைக் கொண்டவரை இயற்கையின்
வெளிச்சம் காட்டத் தான்;

உலகாசை அதிகம் கொண்ட மனிதர்க்கு
பாடம் புகட்டத்தான்
மேகம் நிலவினை மறைக்கிறது
அதன் காரணம்
எதுவும் நிலையல்லவே!

கனவினில் நிஜங்களை உணர்வதனால்
நிஜங்களை கனவாக மாற்ற முடியாது
காரணம்
இது நிழல்படமில்லாத நிஜப்படம்;

உறங்கும் நேரம் மரணத்தை உணர்ந்துகொள்
அதன் பயம் உன்னிடமிருந்து குறையும்;

இரவுகள் கற்றுக்கொடுக்கும் ஓரே பாடம்
உலகத்தில் மாற்றங்கள் அனைத்தும் பொதுவானது;

ஒய்வெடுக்கும் நேரத்தில் இந்த கவித்தோழன் தாலாட்ட
உறங்கிடு என் தோழியே!

- ஷேக் இப்ராஹிம்

எதைத் தேடுகிறோம்???

பிறக்கும் நேரத்தில்
மெதுவாக விழித்திறந்து
பார்க்கும் போது
அழகான உலகைத் தேடுகிறோம்;

அன்பும் அரவணைப்பும்
அதிகமாய் கொடுக்கும் தாயையும்
நிற்கும்வரை விழாமலிருந்துவிட
தவறாமல் தோள் கொடுக்கும்
தந்தையையும் தேடுகிறோம்;

சிறந்த வழியைக் காட்டிவிட
ஒரு ஆசிரியரையும்
வாழக்கைப் பாதையில்
சரியாக பயணிக்க
நல்ல கல்வியையும் தேடுகிறோம்;

இன்பதுன்பத்தில் பங்கிடவும்
நடக்கும் தூரம் வரை காலாக இருக்கவும்
நம் மனமறிந்த நல்ல உள்ளத்திடம்
உயரிய தோழமையைத் தேடுகிறோம்;

மீசை முளைத்த உடனேயே
அழகான பெண்ணின் பார்வை பட்டு விடவும்
அவளைக் கவர்வதற்காண
திறமையையும் தேடுகிறோம்;

உலகை விரிவாய் தெரிந்துகொள்ள
நல்ல கல்லூரியையும்
அதன்பின்
சிறகு முளைத்தப் பறவையாய்
தனியாய் பறந்துவிட
நல்ல வேலையையும் தேடுகிறோம்;

ஒன்றிரண்டு காதல் முறிந்ததாலும்
தனிமை அதிகம் வெறுத்ததாலும்
நம்மோடு கைக்கோர்த்து பயணிக்க
அழகைவிட அழகான
பெண்ணைத் தேடுகிறோம்;

அறிவு நிறைந்த ஆண் பிள்ளையும்
பண்பு நிறைந்த பெண் பிள்ளையும்
நம் பெருமையைக் காத்திட
அவர்களுக்கு
நல்ல எதிர்காலத்தைத் தேடுகிறோம்;

அன்பும் அமைதியும் ஆறுதலும்
மனம் நிறைவாகும் வரை கிடைத்திட
நல்ல முதுமையையும் தேடுகிறோம்;

நாம் மரணிக்கும் நேரத்தில்
நம்பெயர் நிலைத்து நிற்க
நம் வாழ்விற்கு
நல்லதொரு அர்த்தத்தைத் தேடுகிறோம்;