பிறக்கும் நேரத்தில்
மெதுவாக விழித்திறந்து
பார்க்கும் போது
அழகான உலகைத் தேடுகிறோம்;
அன்பும் அரவணைப்பும்
அதிகமாய் கொடுக்கும் தாயையும்
நிற்கும்வரை விழாமலிருந்துவிட
தவறாமல் தோள் கொடுக்கும்
தந்தையையும் தேடுகிறோம்;
சிறந்த வழியைக் காட்டிவிட
ஒரு ஆசிரியரையும்
வாழக்கைப் பாதையில்
சரியாக பயணிக்க
நல்ல கல்வியையும் தேடுகிறோம்;
இன்பதுன்பத்தில் பங்கிடவும்
நடக்கும் தூரம் வரை காலாக இருக்கவும்
நம் மனமறிந்த நல்ல உள்ளத்திடம்
உயரிய தோழமையைத் தேடுகிறோம்;
மீசை முளைத்த உடனேயே
அழகான பெண்ணின் பார்வை பட்டு விடவும்
அவளைக் கவர்வதற்காண
திறமையையும் தேடுகிறோம்;
உலகை விரிவாய் தெரிந்துகொள்ள
நல்ல கல்லூரியையும்
அதன்பின்
சிறகு முளைத்தப் பறவையாய்
தனியாய் பறந்துவிட
நல்ல வேலையையும் தேடுகிறோம்;
ஒன்றிரண்டு காதல் முறிந்ததாலும்
தனிமை அதிகம் வெறுத்ததாலும்
நம்மோடு கைக்கோர்த்து பயணிக்க
அழகைவிட அழகான
பெண்ணைத் தேடுகிறோம்;
அறிவு நிறைந்த ஆண் பிள்ளையும்
பண்பு நிறைந்த பெண் பிள்ளையும்
நம் பெருமையைக் காத்திட
அவர்களுக்கு
நல்ல எதிர்காலத்தைத் தேடுகிறோம்;
அன்பும் அமைதியும் ஆறுதலும்
மனம் நிறைவாகும் வரை கிடைத்திட
நல்ல முதுமையையும் தேடுகிறோம்;
நாம் மரணிக்கும் நேரத்தில்
நம்பெயர் நிலைத்து நிற்க
நம் வாழ்விற்கு
நல்லதொரு அர்த்தத்தைத் தேடுகிறோம்;
each line pictures the exact life admirable one ....
ReplyDelete